சென்னை: 234 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் காலக்கெடுவில் பொது விடுமுறைகள் வருவதால், நடைமுறையில் வேலை நாட்கள் ஐந்தில் மட்டுமே மனுக்கள் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம்; ஆனால் வேலை நாட்களில் மட்டும் காலை 11.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை மனுக்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

மார்ச் 15 நிலவரப்படி தமிழகத்தில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், இதில் 2.90 கோடி பெண்கள், 2.78 கோடி ஆண்கள் மற்றும் 7,656 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன; ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளில் சுமார் 3.50 லட்சம் பேர் ஈடுபடவுள்ளதாகவும், அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முடிந்து இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார். வாகன சோதனைகளில் நேற்று காலை வரை ரூ.1.26 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனைகளின்போது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரசாரம் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும்; அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாகவே பெறப்படும் என்றார். பாதுகாப்புப் பணிக்காக 50 பிரிவு துணை ராணுவப் படையினர் வந்துள்ளதாகவும், தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் வரவுள்ளதாகவும் கூறிய அவர், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என்றும் 5,000க்கும் மேற்பட்டோர் கூடும் நிகழ்வுகளில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கட்சிகளுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.