ஈரான் போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக்க சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சீனாவுக்கான தனது திட்டமிட்ட பயணத்தை ஒத்திவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அமெரிக்கா–சீனா வர்த்தக பேச்சுகள் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த சந்திப்பில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தலைமையிலான குழுவும், சீன துணை பிரதமர் ஹெ லிபெங் தலைமையிலான குழுவும் பங்கேற்றன.

இந்த பேச்சுவார்த்தைகளில் எட்டப்படும் முடிவுகள், மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை பீஜிங்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்–ஷீ ஜின்பிங் சந்திப்பில் முக்கிய தாக்கம் ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

மேற்காசிய நாடுகளின் கச்சா எண்ணெயை சீனா பெரிதும் சார்ந்திருப்பதால், ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது நிலவும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடையை நீக்க சீனா உதவ வேண்டும் என்று டிரம்ப் கூறினார். சீனா உதவுமா என்பதை தனது பயணத்திற்கு முன்பே அறிய விரும்புவதாகவும், அந்நாடு முடிவை அறிவிக்கும் வரை பயணத்தை தள்ளிப் போடும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.