மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தொடர்புடைய பதிலடி தாக்குதல்கள் நடந்ததிலிருந்து, அமெரிக்க வீரர்கள் 13 பேர் உயிரிழந்ததாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, கடந்த 28ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை தொடங்கியதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த மோதலில் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பு மற்றும் ராணுவ ஜெட் விமானங்களும் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோருக்கு லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 180க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

மீதமுள்ள 20 பேரில் 10 பேருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 10 பேர் சில நாட்களில் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என ராணுவம் தெரிவித்தது.

இந்த மோதலின் பின்னணியில் ஈரான், இஸ்ரேல், லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், லெபனானில் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.