வரும் தேர்தல்களை முன்னிட்டு, புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரத் திட்டங்கள் குறித்து த.வெ.க. தலைவர் விஜய், நேற்று சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஏப். 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 23 என்பதால், த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்பும் 50 நிர்வாகிகள் சென்னையின் பனையூர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களிடம் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் நேர்காணல் நடத்தினார். அதில் தேர்வு செய்யப்பட்ட 30 பேருடன் விஜய் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் விஜய் மீண்டும் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையும், விஜயின் பிரசாரச் சுற்றுப் பயணத் திட்டமும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த ஆலோசனையின் அடிப்படையில், புதுச்சேரிக்கான த.வெ.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது மார்ச் 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இம்மாதம் வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி, ஏப். 7 வரை புதுச்சேரியில் பிரசாரம் செய்யவும், அதே நேரத்தில் விழுப்புரம், கடலூர் போன்ற அண்டை மாவட்டங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் மொத்தம் 25 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டம் இருப்பதாகவும் கூறினர்.




