தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன்கள் வழங்கப்பட்டதாகக் கூறி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.
மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை, நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது நலத்திட்ட உதவிகள் வழங்கக் கூடாது என்ற விதி இருப்பதாக தெரிவித்தார். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2,063 மொபைல் போன்கள் வழங்க திட்டமிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதுகுறித்து கேட்கப்பட்ட போது, தனக்கு தெரியவில்லை என்று சேலம் கலெக்டர் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் போன்கள் வைக்கப்பட்ட அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இதேபோல் மொபைல் போன்கள் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், யாரால் யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க. வக்கீல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. மீது களங்கம் பூசும் முயற்சியாக இதை அவர் விமர்சித்தார்.




