வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டதை எழுத்தாளர் பவா செல்லத்துரை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தமிழுக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமல்ல; இந்திய அளவிலேயே அவமானம் என அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் விருது வழங்கலாமா என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, இன்னொரு தரப்பினர் வைரமுத்துவின் எழுத்தை இலக்கியமாகவே கருத முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன், தகுதியற்றவருக்கு விருது வழங்குவது தமிழுக்கே அவமானம் என கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பல இலக்கியவாதிகள் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பவா செல்லத்துரை, வைரமுத்துவுக்கு ஞானபீடம் என்பது தமிழுக்கு ஏற்பட்ட அவமானமல்ல என்றும், இதுவரை இந்திய அளவில் வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியலைப் பார்த்தால் இது ‘இந்திய அவமானம்’ எனத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.




