புதுடில்லி: விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் இணையவழிப் பதிவு நேரங்களில் பயணிகளிடம் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட உத்தரவின்படி, ஒரு விமானத்தில் உள்ள இருக்கைகளில் 60% இருக்கைகளுக்கு ‘இருக்கை தேர்வு’ செய்வதற்காக தனியாக கட்டணம் வசூலிக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. ஜன்னலோரம், முன்பக்கம் போன்ற விருப்ப இருக்கைகளுக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம்.

மேலும், விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் பயணிகளிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே முன்பதிவு எண்ணில் பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு அடுத்தடுத்த இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், விமானப் பயணம் தொடர்பான தகவல்களை பயணிகளின் தாய் மொழியில் வழங்க வேண்டும் எனவும் டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் விமானப் பயணத்தை மேலும் எளிதில் அணுகக்கூடியதாகவும், வெளிப்படையானதாகவும், நியாயமான விலையில் உறுதி செய்யும் வகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.