புதுச்சேரி: காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையாத நிலையிலேயே, புதுச்சேரி சட்டசபையின் 30 தொகுதிகளிலும் திமுகவினர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புப்படி, மார்ச் 23-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஆனால் முதல் இரண்டு நாட்களில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
இந்த சூழலில், காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தாலும், தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை; ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போடப்படவில்லை. அதையும்விட, அனைத்து 30 தொகுதிகளிலும் திமுகவினர் வேட்புமனு தாக்கல் பணிகளில் இறங்கியுள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கான நாட்கள் குறைவாக இருப்பதே இதற்கான காரணம் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. மேலும், “இன்று நல்ல நாள் என்பதால் தாக்கல் செய்தோம்; தலைமையின் உத்தரவின்படி தொகுதிகள் இறுதியான பிறகு தேவையானால் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




