புதுடில்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு வாரங்களில் மூன்று லட்சம் சிறுமியர் தடுப்பூசி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் 14 வயது சிறுமிகளுக்கான இந்த இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 28-ஆம் தேதி ராஜஸ்தானில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் கீழ், கர்ப்பப்பை வாய் புற்றுநோயுடன் தொடர்புடைய எச்.பி.வி. (மனித பாப்பிலோமா வைரஸ்) வகைகளைத் தடுக்கும் “கார்டசில் 4” தடுப்பூசி ஒருமுறை செலுத்தப்படுகிறது.
அரசு சுகாதார மையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முயற்சியை ஐ.நா. சபை பாராட்டியதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
பெண்களிடையே பொதுவாகக் காணப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்காற்றுகிறது என மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர். தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரா, குஜராத், ஒடிஷா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர்.
பல பகுதிகளில் பள்ளித் தேர்வுகள் நடைபெற்று வந்தாலும் முகாம்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். தேர்வுகள் முடிந்ததும் இந்த முயற்சி மேலும் வேகமடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.




