அதிமுகவுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் மார்ச் 19 அன்று சென்னை வர உள்ளார்.
சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் நிலையில், அதிமுக-பாஜ இடையிலான தொகுதி பங்கீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகவில்லை.
இந்த சூழலில் பியூஷ் கோயலின் வருகை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) உடன் நடைபெறும் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை அதிகரிக்கும் என பாஜ தரப்பில் எதிர்பார்ப்பு உள்ளது. மார்ச் 19 பேச்சு முடிந்ததும், மார்ச் 20 அன்று ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும், இம்முறை பாஜ 30 தொகுதிகள் வரை கேட்டு பெறும் சூழல் இருப்பதாகவும், சென்னையில் முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு உள்ளதாகவும் கட்சியினர் கூறுகின்றனர். மார்ச் 30 அன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ளதால், அடுத்த சில நாட்களில் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




