சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை, அமிர்தாஞ்சன் நிறுவனம் உடனடியாக காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனி நீதிபதி வழங்கிய உத்தரவை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி தலைமையிலான அமர்வு உறுதி செய்தது.

லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரவுண்ட் 910 சதுர அடி நிலம், 1901-ம் ஆண்டு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாதம் ரூ.1,400 என வாடகை நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அந்த குத்தகை உரிமைகள் ராமாயி அம்மாளுக்கு மாற்றப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அமிர்தாஞ்சன் நிறுவனம் உரிமைகளைப் பெற்றதாக கூறப்பட்டது.

குத்தகை காலம் 2000 ஆகஸ்ட் 27-ல் முடிவடைந்த நிலையில், இடத்தை காலி செய்யுமாறு 2001 மற்றும் 2004-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் நிறுவனம் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து, அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் 2005-ல் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து, நகரின் மையப்பகுதி என்பதைக் கருத்தில் கொண்டு மாத வாடகையை ரூ.3.30 லட்சமாக நிர்ணயித்தது.

இந்த உயர்த்தப்பட்ட வாடகை நிர்ணயத்தை எதிர்த்து அமிர்தாஞ்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தனி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து, 2001 நவம்பர் 1 முதல் வாடகை நிலுவையை செலுத்தவும் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ல் உத்தரவிட்டார்.

மேல் முறையீட்டில், மேல்முறையீடுதாரர் அசல் குத்தகைதாரர் அல்ல என்றும், வாடகை நிர்ணய நடவடிக்கையில் நிறுவனமும் பங்கேற்ற நிலையில் தற்போது எதிர்ப்பது ஏற்க முடியாது என்றும் அமர்வு குறிப்பிட்டது. கோவில்கள் பூஜை உள்ளிட்ட பணிகளுக்காக இத்தகைய வருமானத்தை நம்பியிருப்பதாகக் கூறி, மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து உடனடி வெளியேற்ற உத்தரவை உறுதி செய்தது.