பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தொடர்பான வழக்குகளில், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. தேர்தல் நடைமுறைக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் இந்நிலையில் எந்த உத்தரவும் வழங்குவது பொருத்தமல்ல என நீதிமன்றம் குறிப்பிட்டது.
கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை நிராகரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், வழக்கில் தன்னை இணைக்க வேண்டும் என்று பா.ம.க. பொதுச் செயலர் வடிவேல் ராவணனும் மனு தாக்கல் செய்திருந்தார். இவை தொடர்பாக முன்பு உயர் நீதிமன்றம் உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
அந்த தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, தடையை நீக்க மறுத்ததுடன், உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து இடைக்கால மனுக்களின் விசாரணைக்கும் தடை விதித்தார்.
மேலும், தேர்தல் முடிந்த பின், குறிப்பாக மே 10க்கு பின் அனைத்து நிலுவை வழக்குகளையும் உரிமையியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.




