சென்னை: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முந்தைய நாளில் தயாரான, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் 20க்கும் மேற்பட்ட அரசாணைகள் தற்போது வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு துறை உயர் அதிகாரி ஒருவர் அரசாணைகளை வெளியிட தயங்குவது காரணமாக கூறப்படுகிறது.
இந்த துறையின் கீழ் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் (CMDA), நகர மற்றும் ஊரமைப்பு துறை (DTCP) உள்ளிட்ட அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றை சார்ந்த புதிய முடிவுகள் எடுக்கப்படும்போது, அவை பொதுவாக துறை வழியாக அரசாணையாக வெளியிடப்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் நிலுவையில் உள்ள கோப்புகளை முடிக்கவும், அதற்கான அரசாணைகளை வெளியிடவும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த ஒரு வாரமாக அதிகாரிகள் இரவு வரை பணியாற்றி, 20க்கும் மேற்பட்ட அரசாணைகள் தயாரானதாகவும், அமைச்சர் அனுமதி மற்றும் வரிசை எண் ஒதுக்கீடு போன்ற பணிகள் முடிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் மார்ச் 15 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து கட்டட அனுமதி, புதிய பணியிட அனுமதி, பணி நியமனம் போன்ற விஷயங்களை சார்ந்த அரசாணைகளை வெளியிட உயர் அதிகாரி தயங்கியதால், அவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு உயரதிகாரி, முந்தைய ஆட்சிக் காலங்களில் தேர்தல் அறிவிப்பு நேரத்தில் வெளியான அரசாணைகள் காரணமாக வீட்டுவசதி துறையில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், சில நிகழ்வுகளில் அதிகாரிகள் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டதாகவும் கூறியதாக தகவல். இதனால் தற்போதைய அரசு செயலர் அரசாணைகளை வெளியிட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




