டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப், இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.

பல பகுதிகளில் நடவடிக்கைகள் முன்னேறி வருவதாகவும், ஈரானின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் தொடரும் என்றும் அவர் கூறினார். மேலும், மூத்த அதிகாரிகளை குறிவைத்து கொல்ல இஸ்ரேல் ராணுவத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இஸ்மாயில் கதீப் உயிரிழந்ததை ஈரான் தரப்பு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இது உறுதியாகும் பட்சத்தில், கடந்த இரண்டு நாட்களில் உயிரிழந்ததாக கூறப்படும் மூன்றாவது மூத்த அதிகாரி இவர் ஆவார். இதற்கு முன் பஸ்ஜி படைத் தலைவர் சுலைமானி மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானி ஆகியோர் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இஸ்மாயில் கதீப், ஈரானின் நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைச்சகங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். ஈரான்-ஈராக் போரின்போது புரட்சிகர படையில் பணியாற்றிய அவர், போரின் போது காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.