காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் அதிகாலையில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 400 பேர் உயிரிழந்ததாகவும், 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தலிபான் தரப்பின் தகவலின்படி, 2,000 படுக்கை வசதி கொண்ட அந்த மையத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கன் வான்வெளியில் அத்துமீறி நுழைந்து மருத்துவமனையை குறிவைத்ததாக குற்றம்சாட்டினார். இது மனிதாபிமான விதிகளுக்கு எதிரானது எனவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காபூல் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவ இலக்குகள் மட்டுமே துல்லியமாக தாக்கப்பட்டதாகவும், மருத்துவமனை தாக்கப்பட்டது என்ற தகவல் தவறானது எனவும் அந்நாட்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக தலிபான் நிர்வாகம் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் தரப்பு கூறி வருகிறது.




