புதுடில்லி: ராஜ்யசபாவில் அவையின் நடைமுறை விதிகள் மற்றும் அலுவல் நடத்தை விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தினார்.

ராஜ்யசபா துணைத் தலைவராக உள்ள மூத்த எம்பி ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு அவையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல மூத்த உறுப்பினர்கள் உரையாற்றினர்.

கார்கே தனது உரையில், முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் மற்றும் பிரச்னைகள் அவையில் விவாதிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார். மேலும், பார்லிமென்ட் அமர்வுகள் அதிக நாட்கள் நடைபெற வேண்டும்; சட்டங்களை இயற்றுவதில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்பும் அதிகரிக்க வேண்டும் எனக் கூறினார்.

மக்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து அவையில் நிச்சயமாக விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், ஏழைகள், சமூகத்தின் விளிம்புநிலை மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் தொடர்பான நலன் பிரச்னைகளைப் பேச அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவ்வகை பிரச்னைகளை எதிர்க்கட்சி எழுப்பும்போது, ஆளும் கட்சியினர் அதை விமர்சனமாகக் கருதி முழுமையாகக் கேட்காமலேயே மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு எம்பிக்கும் அச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வழங்குகிறது என்று கூறிய கார்கே, மக்களின் பிரச்னைகளை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.