புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டிய நடத்தை குறித்து, முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், துாதர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 204 பேர் திறந்த கடிதம் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 12 அன்று சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து நடந்த போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றதாகவும், அப்போது சில எம்.பி.,க்களுடன் பார்லிமென்ட் படிக்கட்டுகளில் அமர்ந்து தேநீர், பிஸ்கட் சாப்பிட்டதாகவும் கடிதம் குறிப்பிடுகிறது.

லோக்சபா சபாநாயகர் தடை விதித்திருந்தும் பார்லிமென்ட் வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாக கூறியுள்ள அவர்கள், இது பார்லிமென்டின் அதிகாரத்தையும் கண்ணியத்தையும் புறக்கணிக்கும் செயல் என விமர்சித்துள்ளனர்.

மேலும், பார்லிமென்ட் படிகள் அரசியல் நாடகம் நடத்தும் இடமல்ல என்றும், இத்தகைய செயல் எம்.பி.,க்களுக்கு ஏற்ற நடத்தை அல்ல என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நடத்தை அரசியல் சாசனத்தின் மாண்பை தாழ்த்துவதாகவும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

லோக்சபா, ராஜ்யசபா அரங்குகளுக்கு வழங்கப்படும் மரியாதை பார்லிமென்ட் வளாகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தும் என்றும், எம்.பி.,க்கள் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும் என்றும் கடிதம் வலியுறுத்துகிறது. இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயக அமைப்புகளுக்கு மரியாதை குறைவைக் காட்டுவதாகவும், பார்லிமென்டை விவாத மேடையாக அல்லாமல் அரசியல் மேடையாக மாற்றும் போக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.