பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது லோக்சபாவில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கை நேற்று லோக்சபாவில் ரத்து செய்யப்பட்டது. இவர்கள் காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து சபாநாயகரிடம் வலியுறுத்தி வந்தனர். இதை பரிசீலிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா முன்பே தெரிவித்திருந்தார்.
ரத்து செய்யும் முடிவுக்கு முன், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தி, சபையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபடக் கூடாது என்றும், சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். இந்த வழிகாட்டுதல்களை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஏற்றுக்கொண்டனர்.
நேற்றைய கேள்வி நேரம் முடிந்து பூஜ்ஜிய நேரம் தொடங்கியபோது, காங்கிரஸ் மூத்த எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ், சில உறுப்பினர்கள் தங்களையும் அறியாமல் செய்த தவறுகளுக்கு வருந்துவதாக கூறி சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, லோக்சபா விதி 370ன் கீழ் சஸ்பெண்ட் ரத்து தீர்மானத்தை முன்மொழிந்தார்; அது குரல் ஓட்டெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
அதே நேரத்தில், சபைக்குள் போஸ்டர்கள், பேனர்கள், புகைப்படங்களை காட்சிப்படுத்துவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மீண்டும் நினைவூட்டினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்களையும் சபையிலோ அல்லது பார்லிமென்ட் வளாகத்திலோ காட்டக் கூடாது எனவும் எச்சரித்தார். இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்கள் குர்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், கிரண் குமார் ரெட்டி, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், பிரசாந்த் படோலே, டீன் குரியாகோஸ் மற்றும் சிபிஐ(எம்) எம்.பி. வெங்கடேசன் ஆகியோரின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.




