புதுடில்லியில் இருந்து, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடி, மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசித்ததாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பதிவில், வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகவும், பிராந்தியத்தில் உருவாகி வரும் பாதுகாப்புச் சூழல் குறித்து விவாதித்ததாகவும் பிரதமர் கூறினார். சமீபத்திய நிகழ்வுகள் தொடர்பான கருத்துக்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டதாக தெரிவித்தார்.

குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது நடைபெறும் தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதை மீண்டும் வலியுறுத்தியதாகவும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது முக்கிய முன்னுரிமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தொடர்ச்சியான ராஜதந்திர ஈடுபாடு அவசியம் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதாக கூறினார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான தொடர்ச்சியான ஆதரவுக்கு பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்ததாகவும் பிரதமர் தெரிவித்தார்.