ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பதவிக்காலம் முடிந்து அவையை விட்டு வெளியேறும் உறுப்பினர்களை பாராட்டினார். அவர்கள் பெற்ற அனுபவம், அவை வெளியேறிய பின்னரும் பொது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் என்று அவர் கூறினார்.
அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து நடைபெறும் விவாதங்களில் ஒவ்வொரு எம்பிக்கும் தனித்துவமான பங்கு இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஓய்வு பெறும் உறுப்பினர்களிடம் “அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை” என்று தெரிவித்தார். அரசியல் பயணம் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது என்றும் அவர் கூறினார்.
தேவ கவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை பார்லிமென்ட் சேவைக்காக அர்ப்பணித்துள்ளதாக மோடி சுட்டிக்காட்டினார். புதிய எம்பிக்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவை நடவடிக்கைகளை அமைதியாகவும் பாரபட்சமின்றியும் நடத்தி உள்ளதாக பிரதமர் பாராட்டினார். எழுதுவதில் திறமை கொண்டவர் மட்டுமல்ல, கடின உழைப்பாளியும் என அவர் குறிப்பிட்டு, நாடு முழுவதும் பயணம் செய்து கடமைகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றியதாகவும் கூறினார்.
பார்லிமென்டின் கண்ணியத்தை காக்கவும், அனுபவம் வாய்ந்த உறுப்பினர்களிடமிருந்து உத்வேகம் பெறவும் புதிய எம்பிக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். ஜனநாயக மரபுகளை வலுப்படுத்த மூத்தோரின் வழிகாட்டுதல் அவசியம் என்றும், ஒருகாலத்தில் அவையின் கலகலப்பான நகைச்சுவை மற்றும் நையாண்டி தருணங்கள் தற்போது குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.




