ராஜ்யசபாவில் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் உறுப்பினர்களை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் பயணத்திற்கு “முற்றுப்புள்ளி” என்பதே இல்லை என்றும், பதவிக்காலம் முடிந்தாலும் பொது வாழ்க்கை தொடரக்கூடும் என்றும் தெரிவித்தார்.
அவையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து நடைபெறும் விவாதங்களில் ஒவ்வொரு எம்பிக்கும் தனித்துவமான பங்கு இருப்பதாக அவர் கூறினார். ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவம் தொடர்ந்து பொது வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்றும், தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் பார்லிமென்ட் சேவைக்கு நீண்ட காலம் அர்ப்பணித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மூத்த எம்பிக்களின் அர்ப்பணிப்பு மற்றும் சமூக பொறுப்புணர்வு பாராட்டுக்குரியது என கூறிய மோடி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவை நடவடிக்கைகளை அமைதியாகவும் பாரபட்சமின்றியும் நடத்தி வருவதாக புகழ்ந்தார்.
ஹரிவன்ஷ் எழுதுவதில் திறமைமிக்கவர் மட்டுமல்ல, கடின உழைப்பாளியும் என கூறிய அவர், நாடு முழுவதும் பயணம் செய்து விடாமுயற்சியுடன் கடமைகளை நிறைவேற்றியதாக தெரிவித்தார். புதிய எம்பிக்கள் பார்லிமென்டின் கண்ணியத்தை காக்கவும், அனுபவமிக்க உறுப்பினர்களிடமிருந்து உத்வேகம் பெறவும், ஜனநாயக மரபுகளை வலுப்படுத்தவும் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், ஒரு காலத்தில் இந்த அவை கலகலப்பான நகைச்சுவை மற்றும் நையாண்டிக்குப் பெயர் பெற்றிருந்ததாகவும், தற்போது அத்தகைய தருணங்கள் குறைந்து வருவதாகவும் அவர் நினைவூட்டினார்.




