வடகொரியாவில் மார்ச் 15 அன்று நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில், கிம் ஜாங் உன் தலைமையிலான ஆளுங்கூட்டணி 99.93% வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவில் தேர்தல்கள் பெரும்பாலும் பெயரளவுக்கே நடைபெறுகின்றன என்ற விமர்சனம் நீண்ட காலமாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக அங்கு என்ன நடக்கிறது என்பது வெளிநாடுகளுக்கு முழுமையாக தெரியாத சூழலும் நிலவுகிறது.
அறிக்கைகளின்படி, ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்வு செய்யும் வேட்பாளர்களே போட்டியிடும் வகையில் தேர்தல் நடத்தப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இல்லாமல், பல இடங்களில் ஒரே வேட்பாளர் மட்டுமே நிறுத்தப்படுவதால், இது ஜனநாயகமற்ற நடைமுறை என உலக அளவில் கருதப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் முக்கியமானவராக குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் கல்லிம்கில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன.




