புதுடில்லி: சீனாவை நோக்கி சென்றுகொண்டிருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் டேங்கர் ஒன்று தற்போது இந்தியா நோக்கி பாதை மாற்றியுள்ளதாக கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் ஆயில் டேங்கர்களை ஈரான் தாக்குவதாக கூறப்படுவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் சுமார் 3 கோடி பாரல்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய திட்டமிட்டிருந்தன.
கப்பல் கண்காணிப்பு தரவுகளின்படி, ரஷ்யாவின் பால்டிக் துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெயுடன் புறப்பட்டு சீனாவின் ரியாவோ துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு டேங்கர் தற்போது நியூ மங்களூரு நோக்கி பயணிக்கிறது. அது மார்ச் 21 அன்று வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் “Suezmax Zuuzu N” என குறிப்பிடப்படும் மற்றொரு கப்பலும் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளதாகவும், அது மார்ச் 25 அன்று வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக, ரஷ்ய கச்சா எண்ணெயுடன் மேலும் ஏழு டேங்கர் கப்பல்கள் இந்தியாவை நோக்கி வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.




