சென்னை: சாதனைகளும் கொள்கைகளும் இல்லாததால் சிலர் ஆபாசங்களும் அவதூறுகளும் பேசுகிறார்கள் என, திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளப் பதிவில், தமிழ்நாட்டில் தற்போது “இரண்டு மேடைகள்” இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக மேடைகளில் மாநிலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சாதனைகள் குறித்து தரவுகளுடன் பேசப்படுவதாக தெரிவித்தார். அந்தச் சாதனைகளால் பயனடைந்தவர்கள் பற்றியும் எடுத்துரைக்கப்படுவதாக கூறினார்.
இதற்கு மாறாக, சொல்லுவதற்குச் சாதனைகளும் செயல்படுத்துவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், வளர்ச்சியைத் தரும் விடியலையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.




