புதுடில்லி: அமலாக்கத்துறை (ED) சோதனையின் போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், “சோதனையின் போது ஒரு முதல்வர் திடீரென வந்தால் மத்திய விசாரணை அமைப்பு எதுவும் செய்யாமல் விட்டு விட வேண்டுமா?” என கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கு, ஜனவரி 8-ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஐபேக் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து உருவானது. நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகளின் விசாரணை பின்னணியில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஐபேக் நிறுவனம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பணிகளை நிர்வகிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை மனுவின்படி, சோதனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் மம்தா பானர்ஜி ஐபேக் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீட்டிற்கு சென்று, லேப்டாப், மொபைல் போன் மற்றும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
நீதிபதிகள் பிரசாத் குமார் மிஸ்ரா, என்.வி. அஞ்சாரியா அமர்வு முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷிவம் திவான், மத்திய அமைப்புகள் மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிப்பது கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் என்றும், இத்தகைய அதிகாரம் பல அமைப்புகளுக்கு இல்லை என்றும் வாதிட்டார்.
மேலும், புதிய குற்றச்சாட்டுகள் உள்ளதாக கூறி பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்ட நிலையில், பதில் மனு ஏற்கனவே 10 நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டு, விசாரணை தொடரும் என்றும், எந்த வழக்கை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீதிமன்றத்திற்கு யாரும் உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தனர்.




