கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திரிணமுல் காங்கிரஸ் (டி.எம்.சி) தலைவர் மற்றும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

மொத்தம் 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் டி.எம்.சி போட்டியிடுகிறது. மீதமுள்ள மூன்று தொகுதிகளில், கூட்டணி கட்சியான அனித் தாப்பா தலைமையிலான பாரதிய கோர்க்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சா போட்டியிடுகிறது.

பவானிபூர் தொகுதியில் மம்தா மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். 2021 சட்டசபை தேர்தலில் நந்திகிராமில் மம்தாவை சுவேந்து அதிகாரி தோற்கடித்திருந்த நிலையில், இருவரும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவது கவனம் பெற்றுள்ளது.

டி.எம்.சி பட்டியலில் 52 பெண்கள், எஸ்.சி/எஸ்.டி பிரிவைச் சேர்ந்த 95 பேர் மற்றும் சிறுபான்மையினரைச் சேர்ந்த 47 பேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 74 தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ள நிலையில், 135 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தலில் 226க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சி அமைப்போம் என மம்தா கூறினார். மேலும் தேர்தல் கமிஷன் பா.ஜ.க-க்கு சாதகமாக செயல்படுகிறது என்றும், தேர்தல் காலத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு பா.ஜ.க மற்றும் தேர்தல் கமிஷனே பொறுப்பு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.