சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனைகளில் இதுவரை ரூ.42.65 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்.23 அன்று சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில், ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவை கண்காணிக்க மாவட்டங்கள்தோறும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதுவரை ரொக்கம் ரூ.2.37 கோடி மற்றும் மதுபானம் ரூ.0.18 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில், போதைப்பொருட்கள் ரூ.2.88 கோடி, விலைமதிப்பற்ற உலோகங்கள் ரூ.16.42 கோடி, இலவசங்கள்/பிற பொருட்கள் ரூ.20.80 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவரும் நோக்கில் வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைத் தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




