தவெக தலைவர் நடிகர் விஜய், கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார். தங்கள் தலைமையிலேயே ஆட்சி அமைப்பதில் கட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் 18 அன்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு நோன்பு திறந்த பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தொழுகையிலும் பங்கேற்றார்.

அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு வந்ததிலிருந்து “இந்த டீம், அந்த டீம்” என பல்வேறு வதந்திகள் பரப்பப்படுவதாக கூறினார். தாம் எந்த அணியிலும் இல்லை; மக்களோடு சேர்ந்த “பீப்பிள்ஸ் டீம்” என்பதே தங்கள் அடையாளம் எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, தாம் எந்த கூட்டணியோடும் சேரப் போவதாக பொய்யான பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் குழப்பமடையக்கூடும் என்றும் விஜய் கூறினார். தவெக எப்போதும் மதசார்பற்ற கொள்கை மற்றும் மதசார்பற்ற சமூகநீதியில் சமரசம் செய்யாது; அந்த நிலைப்பாட்டை தளர்த்தும் பேச்சுவார்த்தையே இல்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்த அவர், நம்பிக்கையோடு இருக்குமாறு கேட்டுக்கொண்டு, இறைவன் அருளால் தங்கள் இலக்கை அடைய முடியும் என்றும் கூறினார்.