நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்த நிலையில், த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா நடத்த இருந்த செய்தியாளர் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. அரசை கண்டித்து மார்ச் 12-ம் தேதி த.வெ.க. மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ், ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தி.மு.க. மிரட்டியதாகவும், அரசியலுக்கு வரும் மனத் தைரியம் விஜய்க்கு மட்டுமே உள்ளதாகவும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன், ஆதவ் மீது விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கிடையில் ரஜினிகாந்த், “காலம் பேசாது; ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” என அறிக்கை வெளியிட்டார். இதன் பின்னர் ஆதவ் விளக்கம் அளிக்க விரும்பியதாகவும், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நேற்று மதியம் 1.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
த.வெ.க. வட்டார தகவலின்படி, ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் ஏற்கனவே கடுமையான மோதல் நடந்து வந்த நிலையில், விளக்கம் என்ற பெயரில் மேலும் சர்ச்சை பெரிதாகும் அபாயம் இருப்பதாக கருதி, விஜய்க்கு தகவல் சென்ற பிறகு அந்த பிரஸ் மீட் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ரஜினியின் திடீர் அறிக்கைக்கு பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக ஒரு தரப்பும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தூண்டுதலால் விஜயை ரஜினி சீண்டியதாக மற்றொரு தரப்பும் கூறி, சமூக வலைதளங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.




