சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார் அறிவித்துள்ள கைது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தனது அறிக்கையில், சம்பவம் நடந்துவிட்டு 10 நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்யவில்லை என்றும், கைது கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்ததாக போலீசார் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டி பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 2022ஆம் ஆண்டு இதே நபர் கைது செய்யப்பட்டதாகவும், 2024 ஆகஸ்டில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறினார். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய வழக்கு மெத்தனமாக கையாளப்பட்டதால் ஜாமின் கிடைத்ததாகவும், பல வழக்குகள் உள்ளவராக கூறப்படும் நபர் ஜாமினில் வெளியே வந்தபோது போலீசார் தொடர்ந்து கண்காணிக்கவில்லை என்பதும் கேள்விக்குரியது என்றும் அண்ணாமலை விமர்சித்தார். மேலும், சிசிடிவி காட்சிகள் மூலமே குற்றவாளி பிடிபட்டதாக கூறும் நிலையில், அதை ஆய்வு செய்ய 10 நாட்கள் எடுத்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என கூறிய அண்ணாமலை, காவல்துறைக்குப் பொறுப்பான முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த கைது மற்றும் விசாரணை காலவரிசை குறித்து பொதுமக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.