பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் குடும்பத்துடன் தொடர்புடைய மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள 4 விவசாய நிலங்கள், மத்திய அரசு நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

மும்பகே கிராமத்தில் உள்ள இந்த நிலங்கள் தாவூத் இப்ராஹிமின் தாயார் அமீனா பீவி பெயரில் பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, தாவூத் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்துகள் மத்திய அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த தாக்குதலில் 257 பேர் உயிரிழந்து, 700 பேர் காயமடைந்தனர்.

இந்த 4 நிலங்களை 2017, 2020, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஏலத்தில் விட முயற்சிக்கப்பட்டாலும், பல காரணங்களால் விற்பனை நடைபெறவில்லை. கடந்த நவம்பரில் சொத்துகளின் மதிப்பு 30% குறைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டம் (SAFEMA) கீழ் இன்று மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. ரூ.9.41 லட்சம் என நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிலத்திற்கு மும்பை மற்றும் ரத்னகிரியைச் சேர்ந்த இருவர் பங்கேற்ற நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.

மீதமுள்ள 3 நிலங்கள் ரூ.2.33 லட்சம், ரூ.8.08 லட்சம் மற்றும் ரூ.15,440 ஆகிய விலைகளில் விற்றன; இவற்றையும் மும்பையைச் சேர்ந்தவர்களே எடுத்தனர். ஏலத்தில் வென்றவர்கள் ஏப்ரல் மாதத்துக்குள் தொகையை செலுத்திய பின் நில உரிமை அவர்களுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாவூத் தொடர்புடைய அனைத்து நிலங்களும் ஏலத்தில் விடப்பட்டதாக செய்தி கூறுகிறது.