ஆக்ஸ்போர்டு பல்கலையின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட 2026 உலக மகிழ்ச்சி தரவரிசையில், பின்லாந்து தொடர்ந்து 9வது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வெளியாகும் இந்த பட்டியலில், உலகின் 147 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட காரணிகள் அடிப்படையாகக் கொண்டு மக்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டன.
அதிகபட்சம் 10 புள்ளிகளில், பின்லாந்து 7.76 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்தது. இந்தியா இந்த ஆண்டு 116வது இடத்தில் உள்ளது; 2025ல் 118வது இடத்தில் இருந்த நிலையில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
டாப் 25 பட்டியலில் பின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், கோஸ்டாரிகா, சுவீடன், நார்வே, நெதர்லாந்து, இஸ்ரேல், லக்சம்பர்க், சுவிட்சர்லாந்து ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டு முதல் 10 இடங்களில் இருந்து வெளியேறிய சுவிட்சர்லாந்து, இந்த ஆண்டு 10வது இடத்தில் மீண்டும் இடம்பிடித்துள்ளது.
மேலும், கொசோவோ (16), ஸ்லோவேனியா (18), செக்கியா (20) போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் டாப் 10 பட்டியலில் ஆப்கானிஸ்தான், மலாவி, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெபனான், எகிப்து, தான்சானியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.




