டெஹ்ரான்: போர் தொடங்கியதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடல் போக்குவரத்து கடுமையாக குறைந்துள்ள நிலையில், ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை தொடர்ந்து மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் நாட்களாக நீடித்து வருவதுடன், இரு தரப்பும் ஏவுகணை தாக்குதல்களை பரஸ்பரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில், பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து, அந்த வழியாக செல்லும் கச்சா எண்ணெய் டேங்கர்களை தாக்கும் என மிரட்டல் விடுத்தது.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, ஜலசந்தியில் சரக்கு கப்பல் இயக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டதாகவும், இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன் பல நாடுகளில் பெட்ரோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்நிலையில் கூட ஈரான் 1.6 கோடிக்கும் மேற்பட்ட பேரல் எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. மார்ச் 1 முதல் 15 வரை 90 கப்பல்கள் ஜலசந்தியை கடந்துள்ளன; போர் முன்பு தினமும் 100 முதல் 135 கப்பல்கள் சென்ற நிலைமைக்கு இது குறிப்பிடத்தக்க குறைவு.
மேலும், ‘டார்க் டிரான்சிட்’ எனப்படும் மறைமுகப் பயண முறையில் சென்ற ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. சீனா, கிரீஸ் போன்ற நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களும் இருந்ததாகவும், பாகிஸ்தானின் ‘கராச்சி’ என்ற கச்சா எண்ணெய் டேங்கரும், இந்தியாவின் ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ என்ற எல்.பி.ஜி. கப்பல்களும் சமீபத்தில் ஜலசந்தியை கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




