டெஹ்ரான்: ஈரானின் தேசியப் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மரணத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானின் புதிய ஆட்சியாளர் அயதுல்லா மொஜ்தபா கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே 20 நாட்களாக போர் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அந்தத் தாக்குதலில் 67 வயதான அலி லாரிஜானி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் உரிய பழிவாங்கல் உண்டு; குற்றவாளிகள் விரைவில் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும்” என மொஜ்தபா கமேனி கூறியுள்ளார். லாரிஜானி அறிவும் தொலைநோக்கும் கொண்டவர் என்றும், இஸ்லாமிய அமைப்பின் பல்வேறு நிலைகளில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சேவையாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இஸ்ரேல் தாக்குதல்களில் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதை ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் உறுதிசெய்து, அதை “கோழைத்தனமான படுகொலை” என விமர்சித்தார். மேலும் அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரின் மரணங்கள் குறித்து வேதனை தெரிவித்து, அவர்களது குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.