தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், அமலாக்கத்துறை (ED) உள்ளிட்ட அமைப்புகளை வைத்து யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத்துறையும் வருமானவரித்துறையும் சுயாதீனமாக செயல்படும் அமைப்புகள் என்றார்.
பிரச்னையில் சிக்கியவர்கள் மீதுதான் விசாரணை நடைபெறும் என்றும், தற்போது பேசப்படும் பல வழக்குகள் தேர்தலுக்கு முன்பே இருந்தவை என்றும் அவர் கூறினார். விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திமுக அமைச்சர்கள் மற்றும் விஜய் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை, வருமானவரித்துறை தொடர்பான வழக்குகள் இருந்ததாகவும், பல ஆண்டுகளுக்கு முன்பே வழக்கு இருந்த நிலையில் இப்போது அதை வைத்து மிரட்டுவதாக கூறுவது சரியா என்று கேள்வி எழுப்பினார்.
கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாட்டுக்கு வரும்போது பேச்சுகள் நடைபெறும் என்றும், அவர் ஓரிரு நாட்களில் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும், வேட்புமனுத் தாக்கலுக்கான கால அவகாசம் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகளுக்கு இன்னும் நேரம் இருப்பதாகவும் கூறினார்.
விஜய் அல்லது அவரது கட்சியுடன் பாஜ எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், அப்படியிருக்க “பிம்பம், கம்பம்” போன்ற பேசுபொருள்கள் தேவையில்லை என்றும் அவர் கூறினார். பிரதமர் மோடி கன்னியாகுமரி மற்றும் கோவைக்கு வர உள்ளதாகவும், தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் போன்றோர் தேர்தல் பிரசாரத்திற்காக வரவுள்ளதாகவும் கூறினார்.
திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளின் சீட்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பேசப்படுவதாக குறிப்பிட்ட அவர், மக்களும் அந்த சீட்டுகளை குறைப்பார்கள் என கருத்து தெரிவித்தார். பாஜ சாதி அல்லது மத அடிப்படையிலான கட்சி அல்ல என்றும், பல்வேறு மத சமூகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்கிறோம் என்றும் கூறிய அவர், யுகாதி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.




