தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் (நாதக) தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.

அறிக்கையின் முக்கிய வாக்குறுதியாக தமிழகத்திற்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை தொழில்நுட்ப தலைநகரமாகவும், திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், கோவை தொழில்-வணிக தலைநகரமாகவும், மதுரை மொழி, கலை மற்றும் பண்பாட்டு தலைநகரமாகவும், கன்னியாகுமரி மெய்யியல் தலைநகரமாகவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் சட்டசபை மற்றும் பார்லிமென்டில் பெண்களுக்கு தனித்தொகுதிகள் பெற போராடப்படும் என்றும், 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு பார்லிமென்ட் தொகுதி என்ற அமைப்பை பெற மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதர வாக்குறுதிகளில் மக்கள் நேரடியாக ஜனாதிபதியை தேர்வு செய்ய அரசியலமைப்பு திருத்தம், மாநிலங்களுக்குள் ஓடும் ரயில்களின் நிர்வாகத்தை அரசியலமைப்பு மாற்றத்துடன் கையகப்படுத்துதல், ஓராண்டிற்குள் படிப்படியாக மதுக்கடைகள் மூடுதல், மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து, தேர்தலில் ஓட்டளிப்பை கட்டாயமாக்குதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து, தமிழ்க்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்போம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.