புதுச்சேரி 16வது சட்டசபைத் தேர்தல் ஏப்.9 அன்று நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் இரண்டு முக்கிய கூட்டணிகளிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியாக நீடித்து வருகிறது. இதனால் கட்சியினரும் வாக்காளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
என்.ஆர்.காங் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.) 30 தொகுதிகளில் என்.ஆர்.காங் 16, பா.ஜ. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 14 என பங்கிடுவது குறித்து ஒரு புரிதல் உருவாகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜன நாயக கட்சியை பா.ஜ. கூட்டணியில் சேர்க்க முன்வந்ததைத் தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பா.ஜ. தலைமை ரங்கசாமியை சமாதானப்படுத்த முயன்றாலும், அவர் அதனை ஏற்க மறுத்து வருவதால் என்.ஆர்.காங்–பா.ஜ. கூட்டணி தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ரங்கசாமி நேற்று மாலை வேட்பாளர் பட்டியலுடன் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் ‘இண்டி’ கூட்டணியிலும் தலைமை யார் என்பதில் காங் மற்றும் திமுக இடையே ஏற்பட்ட உரசல், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வரை தொடர்ந்ததாக கூறப்படுகிறது. கட்சி தலைமைகள் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில், நேற்று திமுக 3 தொகுதிகளிலும் காங் 1 தொகுதியிலும் தனித்தனியாக மனுத் தாக்கல் செய்தது; இது வாக்காளர்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




