லண்டன்: கத்தாரில் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, ஐரோப்பிய சந்தைகளில் காஸ் விலை உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், அமெரிக்காவுக்கு பதிலடி எனக் கூறி அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை இலக்காக வைத்து ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்தையும் டிரோன் மூலம் தாக்கியதாகவும், பின்னர் கத்தாரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதற்கு வளைகுடா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில், பிரிட்டனில் காஸ் விலை 23% உயர்ந்து 171 பவுண்டாக விற்பனை ஆகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையிலும் விலை உயர்ந்துள்ளதாகவும், மோதல் தொடங்குவதற்கு முன் இருந்த நிலையை விட தற்போது இரு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தங்களின் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் நட்பு நாடுகளில் உள்ள எண்ணெய் கட்டமைப்புகளை இலக்காக்கி தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.