வளைகுடா நாடுகளை குறிவைத்து நடைபெறும் தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்; தாக்குதல்கள் தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.

ரியாத்தில் செய்தியாளர்களை சந்தித்த சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நிறுத்துவதே தங்களின் உடனடி முன்னுரிமை என்று கூறினார். பிராந்திய ஸ்திரத்தன்மை மீது சவுதி கவனம் செலுத்துவதாகவும், தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர வழிகளை முழுமையாக பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஈரானுடன் முன்பு இருந்த குறைந்த அளவிலான நம்பிக்கையும் இப்போது முற்றிலுமாகச் சிதைந்துவிட்டதாக அவர் கூறினார். ஈரானின் மிரட்டல்களுக்கு சவுதி அஞ்சவில்லை என்றும், ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேவை என கருதினால் ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை சவுதிக்கு உள்ளது என்றும், கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பும் சுதந்திரமும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், கூட்டு சர்வதேச நடவடிக்கை அவசியம் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, கத்தாரில் உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கத்தார் தெரிவித்தது. யாருக்கும் காயம் இல்லை என கத்தார் உள்துறை அமைச்சகம் கூறியது. மேலும், கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால் ஈரானின் எரிவாயு கிடங்கு மீது பெரிய தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.