வாஷிங்டன்: மேற்கு ஆசியாவில் மோதல் நீடிக்கும் சூழலில், ஈரான் கத்தார் மீது புதிய தாக்குதல்களைத் தொடுக்குமானால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடந்ததாக கத்தார் தெரிவித்தது. தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ சம்பவங்களில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் கூறியது.
இதுகுறித்து வெளியிட்ட பதிவில், ஈரானுக்கு ஏற்படக்கூடிய நீண்டகால விளைவுகளை கருத்தில் கொண்டு “தீவிர ராணுவ நடவடிக்கைக்கு” அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை என டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால், கத்தாரின் எல்பிஜி ஆலை மீண்டும் குறிவைக்கப்பட்டால் அமெரிக்கா தயங்காமல் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயுக் கிடங்கு மீது இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தும் எனவும் டிரம்ப் கூறினார். இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாட்டை ஈரான் அதிகரித்ததால் கச்சா எண்ணெய் விலை 5% உயர்ந்து ஒரு பீப்பாய் 108 டாலரை கடந்ததாகவும், மோதல் தொடங்கியதிலிருந்து மொத்தமாக 50% உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எண்ணெய் நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், வெனிசுலா மீதான தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.




