தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) வேட்பாளர் தேர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கட்சித் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் செலவுக்கு கட்சித் தலைமை நிதி வழங்காது; சுயமாக செலவு செய்யும் திறன் உள்ளவர்களுக்கே சீட் வழங்கப்படும் என விஜய் தெளிவுபடுத்தியதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மாநில நிர்வாகிகள் கூறுகையில், தமிழக தேர்தலில் குறைந்தது ரூ.2 கோடி செலவிட்டால்தான் டெபாசிட் கிடைக்கும் நிலைமை இருப்பதாகவும், வெற்றியை நெருங்க ரூ.5 கோடி முதல் ரூ.20 கோடி வரை செலவாகலாம் என்ற கணக்கீடு இருப்பதாகவும் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், வசதியானவர்களையே முன்னுரிமை பட்டியலில் சேர்க்க கட்சித் தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், அரியலூர், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தகுதி உள்ளதாகக் கருதப்பட்ட 60 பேரை தேர்வு செய்து, மார்ச் 9-ம் தேதி விஜய் ஆலோசனை நடத்தியதாக தகவல். ஆனால் அந்த ஆலோசனைக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டமாக 330 பேரிடம் ஆலோசித்ததில் 32 பேர் மட்டுமே போட்டியிட முன்வந்ததாகவும், இதே நிலை புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அங்கு தேர்வு செய்யப்பட்ட 30 பேரில் 12 பேர் தனியாக செலவு செய்ய முடியாது என தயக்கம் காட்டியதால் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.

மேலும், செலவு செய்யத் தயாராக இருப்பதாக கூறும் நிர்வாகிகளிடம் ‘நம்பகத்தன்மை’ உறுதி செய்ய ரூ.1 கோடிக்கு வங்கி வரைவோலை எடுத்து கட்சிக்கு வழங்குமாறு தலைமை கேட்டதாகவும், இதனால் சீட் கேட்டு வந்த பலர் விலகுவதாகவும் கட்சியினர் புலம்புகின்றனர்.