யுகாதியன்று பச்சடி செய்து உறவினர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்த உணவு, வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் போன்ற பல உணர்வுகள் கலந்த ஒன்றென்பதை உணர்த்தும் வகையில் செய்யப்படுகிறது.
இதில் பல்வேறு சுவைகள் ஒன்றாக சேரும்: கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு பச்சை மாங்காய், புளிப்புக்கு புளிக்கரைசல், காரத்துக்கு பச்சை மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம்.
தேவையான பொருட்கள்: வேப்பம்பூ 1/2 கப், பச்சை மாங்காய் 1, புளிக்கரைசல், பச்சை மிளகாய், இஞ்சி ஒரு துண்டு, வெல்லம், உப்பு தேவைக்கு ஏற்ப.
செய்முறை: முதலில் வெல்லத்தைத் தூளாக்கவும். புளியை ஊற வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு கெட்டியான கரைசலாக எடுத்துக் கொள்ளவும். மாங்காயின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். பின்னர் வெல்லம், புளிக்கரைசல், மாங்காய் துண்டுகள், நறுக்கிய பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாகக் கிளறினால் யுகாதி பச்சடி தயாராகும்.




