கடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விரைவாக தொகுதி பங்கீட்டை முடித்த கட்சிகளில் ஒன்றாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.), இப்போது அடுத்த தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திணறுகிறது.

தி.மு.க. வட்டாரங்கள் கூறுவதன்படி, வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் தி.மு.க. மூத்த அமைச்சர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வி.சி.க. தரப்பில், தற்போது இரண்டு எம்.பி.க்களும் நான்கு எம்.எல்.ஏ.க்களும் இருப்பதை முன்வைத்து, இந்த முறை எட்டு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக, கூட்டணியில் ஆரம்பம் முதல் நம்பிக்கைக்குரியவராக திருமாவளவன் இருப்பதாக கூறிய தி.மு.க. தரப்பு, கூட்டணியில் கட்சிகள் அதிகரித்துள்ளதால் மற்ற கட்சிகளுக்கும் இடம் வழங்க வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டி, பழைய எண்ணிக்கையில் குறைந்தது ஒரு தொகுதியையாவது குறைத்துக் கொள்ளுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதை திருமாவளவன் ஏற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், மூன்று பொது தொகுதிகள் உட்பட எட்டு தொகுதிகள் வேண்டும் என்றும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குறைந்தது ஒரு தொகுதி வழங்க வேண்டும் என்றும் வி.சி.க. தரப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. சம்மதம் தெரிவித்தாலும், நிபந்தனையாக ஆறு தொகுதிகளில் மட்டும் வி.சி.க. சின்னத்தில் போட்டியிடலாம்; ஒரு தனித் தொகுதி மற்றும் ஒரு பொது தொகுதியில் தி.மு.க. ‘உதயசூரியன்’ சின்னத்தில் நிற்க வேண்டும் என்று கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், கடந்த தேர்தலில்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்ததால், இந்த தேர்தலில் சொந்த சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று வி.சி.க. தரப்பு அந்த நிபந்தனையை மறுத்ததாகவும் கூறப்படுகிறது.