உலகிற்கு தேவையானது நல்லிணக்கமே; போர் அல்ல என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். போரும் உலகளாவிய மோதல்களும் சுயநல சிந்தனைகளும் ஆதிக்க ஆசையும் காரணமாக உருவாகின்றன என்றார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் தர்மத்தை பின்பற்றுவதன் மூலம் நிலையான அமைதியை அடைய முடியும் என்று கூறினார். உலக மோதல்களின் பின்னணியில் சுயநலமே பெரும்பாலும் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்தியா மனிதாபிமானத்தை பின்பற்றுகிறது என்ற அவர், கட்டாய மதமாற்றங்கள் மற்றும் உயர்வு-தாழ்வு மனப்பான்மைகள் இன்னும் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், கடந்த 2,000 ஆண்டுகளாக மோதல்களை தீர்க்க உலகம் பல்வேறு யோசனைகளை முயன்றும் பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்று கூறிய அவர், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்; அனைவரும் ஒன்றே என்ற சிந்தனை உருவாக வேண்டும் என்றார்.

மோதலை தவிர்த்து நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை நோக்கி மாற வேண்டும் என்றும், ஒழுக்கத்தை கடைபிடிக்க தொடர்ச்சியான பயிற்சி அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.