சென்னை மாதவரம் பகுதியில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 46 கிலோ தங்கக்கட்டிகளை தேர்தல் பிரிவு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பணம் அல்லது பொருட்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் மாதவரம் பகுதியில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 46 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதற்கான ஆதார ஆவணங்கள் எதுவும் வழங்கப்படாததால், சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.