ராய்பூர்: கட்டாய மதமாற்றங்களைத் தடுக்கவும், அதில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கவும் புதிய சட்ட மசோதாவை சத்தீஸ்கர் அரசு நேற்று சட்டசபையில் அறிமுகம் செய்தது. கூட்டு மதமாற்றம் என வரையறுக்கப்படும் வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கும் விதியும் இதில் இடம் பெற்றுள்ளது.

சத்தீஸ்கர் தர்ம் ஸ்வதந்த்ரயா விதேயக் - 2026 (மத சுதந்திர மசோதா - 2026) என்ற பெயரில் இந்த மசோதாவை துணை முதல்வர் விஜய் சர்மா தாக்கல் செய்தார். 2000ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிந்தபோது அமலுக்கு வந்த மத சுதந்திர சட்டத்திற்கு மாற்றாக இது கொண்டு வரப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

திருமணம், நிதியுதவி போன்ற ஆசை வார்த்தைகள் கூறுதல் அல்லது மிரட்டல் மூலம் பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர் உள்ளிட்டோர் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கவே இந்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

மசோதாவின் முக்கிய அம்சங்களின்படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்; இது 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.5 லட்சம் அபராதமும் முன்மொழியப்பட்டுள்ளது. சிறார்கள், பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான வழக்குகளில் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டுக்கும் மேற்பட்டோரை மதமாற்றம் செய்வது “கூட்டு மதமாற்றம்” எனக் கருதப்பட்டு, அதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என மசோதா கூறுகிறது; மேலும் மதமாற்ற வழக்குகளில் ஜாமின் வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவர் தன் மூதாதையர் மதத்திற்கு மீண்டும் திரும்புவது மதமாற்றமாகக் கருதப்படாது; மதம் மாற விரும்புவோர் மாவட்ட நீதிபதி நிலை அதிகாரியிடம் முன்கூட்டியே அறிவிப்பு அளிப்பது கட்டாயம் என்றும் மசோதாவில் இடம் பெற்றுள்ளது.