வரவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக தலைமையிடம் 39 தொகுதிகள் கொண்ட விருப்ப பட்டியலை வழங்கியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு 28 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி. இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் வழங்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
28 தொகுதிகளுக்குள் எந்த தொகுதிகளை கோருவது, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்க தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கூடியது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு 39 தொகுதிகள் கொண்ட விருப்ப பட்டியலை திமுக தலைமையிடம் காங்கிரஸ் அளித்துள்ளது.
இந்த பட்டியலில் கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு, பத்மநாதபுரம், திருவைகுண்டம், விருதுநகர், ஆலங்குளம், தென்காசி, காரைக்குடி, ராமநாதபுரம், நாங்குநேரி, திருநெல்வேலி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், கடலூர், கும்பகோணம், சிதம்பரம், மதுரை மத்தி, திருப்பூர் மேற்கு, கோவை தெற்கு, வேளச்சேரி, ஊட்டி, சிவகாசி, விருத்தாச்சலம் உள்ளிட்ட பல தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது காங்கிரசுக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், அவர்களுக்கான தொகுதிகளில் ஐந்து முதல் ஏழு வரை மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், சில எம்.எல்.ஏ. தொகுதிகளை கூட்டணி கட்சிகள் கேட்பதால், அவற்றை காங்கிரஸ் தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது விட்டுக்கொடுப்பதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




