தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை தேர்தல் கமிஷனின் cVIGIL மொபைல் செயலி மூலம் தெரிவிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கேட்டுக் கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பேசிய அவர், விதிமீறல் நிகழ்வுகளை புகைப்படமாக பதிவு செய்து செயலி வழியாக அனுப்பலாம் என்றும், புகார் அளிப்பவர்களின் அடையாளம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழகம் அதிக தேர்தல் செலவு செய்யும் மாநிலம் என்ற பெயர் ஏற்கனவே உள்ளதாக குறிப்பிட்ட அவர், அதை கட்டுப்படுத்த மத்திய அரசின் ஏஜன்சி மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புதிய வாக்காளர் தகவல் சீட்டின் மேற்பகுதியில் பாகம் எண் உள்ளிட்ட விவரங்கள் தனி கட்டமாக காட்டப்படும்; இதனால் முன்புபோல் தேடி கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் குறையும் என்றார். பள்ளிகளுக்கு அப்பால் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் ஓட்டுச்சாவடிகள் அமைக்க முயற்சிகள் நடக்கின்றன; ஆனால் மூன்று நாட்கள் வரை தேர்தல் கமிஷனுக்கு இடம் ஒதுக்க வேண்டியதால் சிலர் ஒப்புதல் தர மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாக்காளர்கள் தங்கள் துறைகளில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மூலம் தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவை, விமான போக்குவரத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்டவை இந்த வசதிக்குள் வரும்; தேர்தல் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களும் தபால் ஓட்டுக்கு தகுதியுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.