சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை ‘தமிழகம் 2030’ தொலைநோக்கு திட்டத்தை மையமாகக் கொண்டு, அதை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் கூடுதல் அம்சங்களுடன் வெகு விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தனது அறிக்கையில், மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய தேர்தல் அறிக்கை என்றால் அது திமுகவின் தேர்தல் அறிக்கையென கூறிய அவர், 2021 முதல் 2026 வரையிலான காலத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்து தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கட்சியினரை கேட்டுக்கொண்டார்.
மேலும், வரவிருக்கும் தேர்தல் களத்தை ‘தமிழகம் vs டில்லி’ என்ற கோணத்தில் முன்வைத்து, முக்கிய முடிவுகள் டில்லியில் இருந்து தீர்மானிக்கப்படுவதாக விமர்சித்தார். தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிதி, முடக்கப்பட்ட திட்டங்கள், மாநில உரிமைகள், சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு போன்றவற்றுக்காக அல்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தைக்காகவே எதிர்க்கட்சித் தலைவர் டில்லியில் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
டில்லியின் ஆதிக்கத்தை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும், தேர்தலைச் சந்திப்பதற்கே டில்லியின் சம்மதம் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள் தமிழகத்தை ‘அடகு’ வைக்கத் தயங்கமாட்டார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார். தமிழக உரிமைகளை காக்கவும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வலிமை உள்ளது என கூறி, மக்களிடம் சென்று களத்தில் நின்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.




