தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கூட்டணியில் பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்ற கேள்விக்கு, “எண்ணிக்கை முக்கியமல்ல; நோக்கமே முக்கியம்” என்று கூறினார். சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதை தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து மொழி விவகாரம் குறித்து பேசுவதை விமர்சித்த அவர், தமிழக மக்களுக்கு தேவையான நன்மைகளை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும் என்றார். தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி பேசுபவர்கள் உள்ளதாகவும், வட இந்தியாவைச் சேர்ந்த பலர் வேலைக்காக தமிழகத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் சுமார் 25% இருப்பதாக கூறிய அவர், அந்த மொழிகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். இதேபோல், இந்துக்களின் வாக்குகள் வேண்டாம் என்று கூறப்படுகிறதா என்றும் அவர் கேட்டார்.

நாளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருவதாகவும், அதன்பிறகு கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தை எங்கு நடைபெறும் என்பது குறித்து “நாளைக்கு வந்து பார்க்கலாம்” என்ற அவர், டெல்லியில் எடுக்கப்படும் முடிவு நல்ல முடிவாகவே இருக்கும் என்றும், தேஜ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.

சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்கப்பட்டபோது, அது இன்னும் முடிவாகவில்லை என அவர் பதிலளித்தார். பின்னர், தொகுதி எண்ணிக்கை குறித்து மீண்டும் “எண்ணிக்கை முக்கியமல்ல; நோக்கமே முக்கியம்” என்று கூறிவிட்டு அவர் காரில் புறப்பட்டுச் சென்றார்.